விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளரும் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான ராஜவர்மன் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார். ஆசிலாபுரம், முறம்பு சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து விட்டு வேலாயுதபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்க அவர் சென்ற போது, அப்பகுதி மக்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
'திரும்பவும் வந்துறாத' - பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமமுக வேட்பாளர் - ammk candidate Rajavarman campaigning in Velayuthapuram area
தேர்தல் பரப்புரையின் போது சாத்தூர் அமமுக வேட்பாளர் ராஜவர்மனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றமால் மீண்டும் ஓட்டு கேட்டு வந்துள்ளீர்களா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
"கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு வந்தபோது, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நீங்கள் செய்யவில்லை. இப்போது எந்த தைரியத்தில் வாக்கு கேட்டு வந்துள்ளீர்கள்" என அப்பகுதி மக்கள் காட்டமாக பேசினர். இதையடுத்து அமமுக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
உடனே காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றமால் மீண்டும் ஓட்டு கேட்டு வந்தால் இப்படித்தான் விரட்டியடிப்போம் என்று பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.