எய்ம்ஸ் மருத்துவமனை கமிட்டி: டாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை
விருதுநகர்: எய்ம்ஸ் மருத்துவமனை கமிட்டி உறுப்பினராக டாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான (தெலங்கானா) ப. மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், விருதுநகர் மக்களவை தொகுதிக்குள்பட்ட மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கமிட்டி உறுப்பினராக அகில பாரதிய மாணவர் அமைப்பின் தேசிய தலைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் சுப்பையா சண்முகத்தை உறுப்பினராக நியமித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதற்காகவே இந்த பரிசு (பதவி )அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதசார்புள்ளவரும் பெண்களை இழிவுபடுத்திப் பேசியவருமான டாக்டர் சுப்பையா சண்முகத்தின் நியமனத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுதான் மனுசாஸ்திரத்தின் வழி ஆட்சியோ?
டாக்டர் சுப்பையா சண்முகம் மீது சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு பெண் ஒருவர் கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ” என பதிவிட்டுள்ளார்.