விருதுநகர்: Ex Minister Rajendra Balaji: ஆவின் - அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டுவரும் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பிலிருந்த ராஜவர்மனை மதுரையில் வைத்து தனிப்படை சுற்றிவளைத்துப் பிடித்தது.
ராஜேந்திர பாலாஜி மீது நவம்பர் 15ஆம் தேதியன்று ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக வெம்பக்கோட்டை முன்னாள் மேற்கு ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
தலைமறைவான ராஜேந்திர பாலாஜி இந்தியா முழுவதும் தேடுதல் வேட்டை
இதனைத் தொடர்ந்து தன்னை கைதுசெய்யக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தலைமறைவானார். அவர் தலைமறைவான உடன் அவரைத் தேடும் பணியில் எட்டு தனிப்படையினர் நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் தேடிவந்தனர்.
ராஜேந்திர பாலாஜி வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார் இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் போன் கால்ஸ், அவர் சென்றுவரும் இடங்கள், அவரது உறவினர்கள், நண்பர்கள் எனக் காவல் துறையினர் மிக தீவிரமாக விசாரித்துவந்த நிலையில் தற்போது அவரது நெருங்கிய நண்பர் ராஜவர்மனை மதுரையில் வைத்து ஒரு தனிப்படை சுற்றிவளைத்துப் பிடித்தது.
டிஐஜி 3 மணி நேரம் விசாரணை
இதனை அடுத்து அவரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துவந்து மதுரை சரக டிஐஜி காமினி தலைமையில் விசாரணை நடைபெற்றது. தலைமறைவான ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பிலிருந்த ராஜவர்மன் உள்பட நான்கு பேரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து டிஐஜி காமினி 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
ராஜேந்திர பாலாஜியுடன் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் விசாரணைக்குப் பின்னர் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜவர்மன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவதற்கு முன்புவரை என்னுடன் தொடர்பிலிருந்தார். அதற்குப் பின்னர் என்னுடன் தொடர்பில் இல்லை. நாங்களும் அவரைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வருவேன்
மேலும், ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட பொய் வழக்கை அவர் சட்டப்பூர்வமாகச் சந்திப்பார். இந்த வழக்கு சம்பந்தமாக மீண்டும் தன்னை விசாரணைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வருவேன்.
தலைமறைவான ராஜேந்திர பாலாஜி ராஜேந்திர பாலாஜியின் உடல்நிலை சரியில்லாததால்தான் முன்பிணை வாங்குவதற்காக அவர் அலைந்துகொண்டிருக்கிறார். ராஜேந்திர பாலாஜி வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார்" என்று கூறினார்.
இதையும் படிங்க:அஜித்தின் வலிமை ட்ரெய்லர் வெளியீடு!