தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவியாளரை சாதிப்பெயர் சொல்லி திட்டியதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

விருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவியாளரை தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை புரிந்ததாக கணக்கு அலுவலர் கண்காணிப்பாளர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உதவியாளரை சாதிப்பெயர் சொல்லி திட்டியதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு
உதவியாளரை சாதிப்பெயர் சொல்லி திட்டியதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு

By

Published : May 31, 2022, 11:05 PM IST

விருதுநகர்: மதுரை சாலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர், மாரியப்பன்(48). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அதே அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர், இளங்கோவன். இவர், மாரியப்பன் தண்ணீர் குடிக்கச் சென்ற போது சாதிப் பெயரை சொல்லித் திட்டியதோடு குவளையை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு பணிபுரியும் கதிரேசன் என்பவர் மூலம் தேநீரில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுவதாக சைகை மூலம் மிரட்டினாராம்.

மேலும் இளங்கோவனின் தூண்டுதலின் பேரில் அங்கு பணிபுரிந்து வரும் கணேஷ்முனியராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர், கழிவறையை பூட்டிக் கொண்டதோடு, பட்டியல் இனத்தவர் இந்தக் கழிப்பறையை பயன்படுத்தக் கூடாது என மாரியப்பனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும்,அதே அலுவலகத்தில் பணியாற்றும் முத்துமுருகானந்தம் என்பவர் மாரியப்பனை அலுவலகக் கணிப்பொறியை பயன்படுத்தக்கூடாது என மிரட்டி இருக்கின்றனர். கணக்கு அலுவலரான தர்மேந்திரா என்பவர், ’உன்னைப் போன்றவர்களை வேலைக்கு வைத்திருக்க மாட்டோம்’ என மாரியப்பனை மிரட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையடைந்த உதவியாளர் மாரியப்பன் விருதுநகர் ஊரகக் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் பொதுப்பணித்துறை கணக்கு அலுவலர், கண்காணிப்பாளர் உட்பட 6 பேர் மீதும் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.7000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற உதவி செயற்பொறியாளர் கைது

ABOUT THE AUTHOR

...view details