விருதுநகரில்22 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என மொத்தமாக 8 பேர் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் நான்கு பேரும் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள சிறுவன் ஒருவன், தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறி புகார் அளித்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி முதலமைச்சர், போக்சோ நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர் நீதிமன்ற பதிவாளர், உள்துறைச் செயலர், ஐ.ஜி, டிஐஜி, குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சட்ட உதவி மையத் தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் சிறுவன் தெரிவித்துள்ளபடி, “ஹரிஹரன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்த இளம்பெண் தனித்தனியாக வெவ்வேறு நாள்களில் அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அவர் எங்களை மிரட்டினார். ஆனால், காவல் துறையினர் எங்களை கைது செய்தபோது விவரத்தைக் கூறினேன். இளம்பெண்ணின் அலைபேசியைப் பார்த்தால் உண்மை தெரியும் என்றும் கூறினேன்.