விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து என்பவரது மகன் முத்துக்குமார். இவர் அந்த பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 5 நாள்களுக்கு முன்பு தனது மகனை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறும் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் முத்துக்குமாரின் தந்தை புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்தனர். அப்போது, சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனைகூட்டம் காட்டுப்பகுதியில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர், இறந்து போனது முத்துக்குமார் என்பதை உறுதிப்படுத்தினர். கழுத்து மற்றும் தலைப்பகுதியில் வெட்டபட்ட நிலையில், ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முத்துக்குமாரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில், கொலை தொடர்பாக விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பண்டித்துரை, மாரீஸ்வரன், பெரியசாமி, அலார்ட் ஆறுமுகம், சரவணக்குமார் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மகன் அடித்துவிட்டதாக கூறி ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு