விருதுநகர்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் காவல்தோப்பு பேச்சியம்மன் கோயில் உள்ளது. அதன் எதிரில் உள்ள மேட்டில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், கறுப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்கள், சுடுமண் குழாய்கள், கல் குண்டு ஆகியவை சிதறிக் கிடப்பது கண்டறியப்பட்டது. இவை 4000ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் ஆகும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 4000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலை கண்டுபிடிப்பு இரும்புத் தாதுவை கல் சுத்தியல் கொண்டு சிறியதாக உடைத்து, ஊது உலையிலிட்டு உருக்கி, இரும்பைப் பிரித்தெடுத்துள்ளனர். இத்தாதுக்களை உருக்க, அதிக வெப்பம் தேவை என்பதால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளைகள் கொண்ட சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இங்கு நீள்வட்ட வடிவிலான இரு சுடுமண் உலைக்களங்கள் புதைந்த நிலையில் உள்ளன.
இங்கு காணப்படும் தொல்பொருட்கள் மூலம் சுமார் 4000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இவ்வூரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது. எனவே, அகழாய்வு மூலம் அரசு இதை வெளிக்கொணர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தங்கம் விலை உயர்வு