விருதுநகர்: அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர், ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்தன.
அதன் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் காவல் துறையினர் 8 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் வழியாக ராஜேந்திர பாலாஜி காரில் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற தனிப்படையினர், ராஜேந்திர பாலாஜியை, ஹாசன் நகரில் நேற்று (ஜனவரி.5) கைது செய்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்டத்திற்கு தனிப்படையினர் அழைத்து வந்தனர். அவரிடம் உயர் காவல்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.