விருதுநகர்:சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் கிராமத்தில் கனிஷ்கர் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையின் வளாகத்திலேயே பட்டாசு கடை ஒன்றும் இயங்கி வருகிறது. தற்போது தீபாவளிக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் சிறிய பட்டாசுகளை கொண்டு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணிகள் பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள குடோனில் நடைபெற்று வந்துள்ளது.
அவ்வாறு பேக்கிங் செய்து கொண்டிருக்கையில், கிப்ட் பாக்ஸ் வெடிகளை சோதனை செய்வதற்காக அதிலிருந்து ஒரு வெடியை எடுத்து ஆலை வளாகத்திலேயே சோதித்து பார்த்துள்ளனர். அப்போது வெடித்து சிதறிய பட்டாசு எதிர்பாராத விதமாக கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்யும் இடத்தில் விழுந்தது. இதனால், பேக்கிங் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.
ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலி:இதில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பெண் ஒரு ஆண் என 13 பேர் உடல் கருகிய நிலையில், தற்போது வரையில் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தென்மண்டல டிஐஜி ரம்யா பாரதி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த 13 பேரில் 6 பேர் அழகாபுரி என்ற ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதேபோல, சிவகாசி அருகே மாரனேரி ஆர்யா பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சிவகாசியில் நேற்று ஒரே நாளில் இரு வேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் இன்று (அக்.18) வரை 14 பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல்களை வாங்க மறுப்பு:விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. சிவகாசி எம்.புதுப்பட்டி அருகே உள்ள ரங்கபாளையம் கிராமத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி மேலாளர் ராம்குமார், போர் மேன் கனகு (எ)கனகராஜ் ஆகிய மூன்று பேர் கைது செய்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிந்த அழகாபுரி பகுதியை சேர்ந்தவர்களின் உறவினர்கள் உடற்கூராய்வு முடிந்தப் பின்னர், உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து திடீரென காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அழகாபுரி பகுதியில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிவகாசி வெடி விபத்தில் 11 பேர் பலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!