விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சிறுவன் மற்றும் மாணவி ஆகிய இருவரும் ஊரில் அமைந்துள்ள கரும்பு தோட்ட பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கரும்பு தோட்டத்திற்கு வந்த மற்றொரு இளைஞர், சிறுவனை கரும்பால் அடித்து அங்கிருந்து அவனை விரட்டியுள்ளார். பின்னர், மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:அப்துல் கலாம் பிறந்த நாள்: 25 அடி உயர விண்கலம், அப்துல்கலாம் திருவுருவ சிலை அமைத்து சிறப்பு நிகழ்ச்சி!
இந்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தனியார் பள்ளி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இளைஞர்தான் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தபட்டுள்ளது.
இதனையடுத்து, மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனிடையே, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் பிடிக்கச் சென்றபோது, தவறி விழுந்ததில் அந்த இளைஞரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:"நீங்கள் தான் என் தாய்.. நீங்கள் தான் என் சகோதரிகள்..." மகளிர் உரிமை மாநாட்டில் ஒலித்த பிரியங்கா காந்தியின் குரல்!