விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களாக செங்கல்பட்டில் பணிபுரிந்துவந்துள்ளார். இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர் திரும்பிய இவருக்கு செங்கல்பட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் கரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
இதனால் கரோனா தொற்று குறித்து அச்சத்தில் இருந்த ஜெயக்குமார் நேற்று (புதன்கிழமை) தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், இன்று விழுப்புரம் சுகாதாரத் துறை அலுவலர்களைத் தொடர்புகொண்ட, செங்கல்பட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் ஜெயக்குமாருக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்துள்ளனர்.
இதன்பின்னர் ஜெயக்குமாரைத் தேடிவந்த சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்துள்ளது. இவர், கரோனா தொற்று குறித்த மன உளைச்சலினால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.