ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு! - collectorate office news
விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயவேல், அர்ச்சனா தம்பதி. இவர்கள் இருவரும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் கலப்பு திருமணம் செய்துகொண்டு, அவலூர்பேட்டை பகுதியில் இருக்கும் புறம்போக்கு இடத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை அந்த இடத்தைவிட்டு காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அர்ச்சனா இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார். இதனை பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் மனு அளித்தார்.