விழுப்புரம் பெரியார் நகரில் அரசு மதுபானக் கடை ஒன்று சில மாதங்களுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. இந்தக் கடையினால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து பெரியார் நகர் பகுதியில் இயங்கி வந்த மதுபானக் கடையை அரசு அலுவலர்கள் மூடினர்.
மதுக்கடை வேண்டும்; வினோத மனு அளித்த உழைப்பாளிகள்
விழுப்புரம்: அரசு அலுவலர்களால் மூடப்பட்ட மதுபானக் கடையை மீண்டும் திறக்கக்கோரி உழைக்கும் வர்க்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்கக்கோரி பெரியார் நகர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது., "இதுவரை எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் இயங்கிவந்த மதுபானக் கடையை சிலருடைய தூண்டுதலின் பேரில் அலுவலர்கள் மூடியுள்ளனர்.
நாங்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களால் நீண்ட தூரம் சென்று மது அருந்த முடியவில்லை. அதனால் எங்கள் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்து, எங்களை மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.