ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விழுப்புரம்:விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்ரோடு வரை செல்லும் அரசுப் பேருந்து காலை மற்றும் மாலை வேளையில், மாணவர்களின் நலன் கருதி, அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் பெயரில், மாணவர்களுக்கு என்று பிரத்யேகமாக ‘மாணவர்கள் சிறப்பு பேருந்து’ என்று இயக்கப்பட்டு வந்தது.
கடந்த ஒரு வருடமாக மாணவர்களுக்கு மட்டும் என்ற ஸ்டிக்கர் ஒட்டியபடி இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவராக பழனி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், இப்பேருந்தானது மீண்டும் பொதுமக்கள் சென்று வரும் அரசுப் பேருந்தாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அன்று காலை கோலியனூர் கூட்ரோட்டில் வந்த இந்த அரசுப் பேருந்து, ராகவன் பேட்டை பேருந்து நிலையத்தில் நின்ற மாணவர்களை ஏற்றாமல் வந்ததாகக் கூறி, நேற்றைய தினம் பேருந்தில் ஏறிய மாணவர்கள், நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பேருந்து ஓட்டுநர், கம்பன் நகர் பகுதியின் சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு, நெடுஞ்சாலை ஓரமாக அமர்ந்து இனி பேருந்தை இயக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்டது. பின்னர் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு, அதிலிருந்து பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.
இதையும் படிங்க:ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இணையதளம் மூலம் தீர்வுகாண புதிய திட்டம்!