வாசல்:
மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாக இருந்த விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிப்பட்ட பின்னர், செஞ்சி. மயிலம், திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
தொகுதிகள் உலா:
செஞ்சி:மராத்திய மன்னர் வீரசிவாஜி, ராஜா தேசிங்குப் போன்றோர் ஆண்ட பகுதி செஞ்சி. இங்குள்ள கோட்டை, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் தொகுதியின் சிறப்புகள். செஞ்சி கோட்டையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்; செஞ்சி மலை உச்சியில் இருக்கும் இரண்டு கோட்டைகளுக்கு செல்ல ரோப் கார் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள்.
தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்; நிரந்தர பேருந்துநிலையம் அமைக்க வேண்டும்; அரசு கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி கொண்டு வர வேண்டும்; திண்டிவனம் திருவண்ணாமலை ரயில் பாதைத் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும்; அதிகமான பனை மரங்கள் அதிகம் இருக்கின்ற மேல்மலையனூர் பகுதியில், பனைத் தொழில் செய்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பனை சார்ந்த தொழில்சாலை கொண்டுவர வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் வேண்டுகோள்களாகும்.
மயிலம்:தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தொகுதி இது. முழுவதும் கிராமங்களைக் கொண்ட தொகுதி. விவசாயமே பிரதான தொழில். மாவட்டத்தில் பின் தங்கியத் தொகுதியாக இருக்கிறது மயிலம். இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்; மயிலம் ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்; அரசு கல்லூரி அமைக்க வேண்டும்; தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன தொகுதி மக்களின் கோரிக்கைகளாகும்.
தொகுதியில் நேரடிக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; சின்ன வெங்காயம், கருணைக் கிழங்கு ஆகியவைகளை தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
திண்டிவனம் (தனி): தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார் என்றழைக்கப்பட்ட ராமசாமி படையாச்சி பிறந்த ஓமந்தூர் இத்தொகுதியில் தான் உள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் சொந்த தொகுதியும் திண்டிவனம் தான். கடந்த 2011ஆம் ஆண்டில் தனி தொகுதியாக மாற்றப்பட்டது. திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும்; இங்குள்ள ரயில் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்; உள்ளூரில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன தொகுதியின் பிரதான கோரிக்கைகள்.
விழுப்புரம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...! மரக்காணம் பகுதியில் உப்பளத் தொழிலையும், தொழிலாளர்களையும் காக்கும் வகையில், உப்பு தொழிற்சாலை தொடங்க வேண்டும்; கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதும், இன்னும் நிறைவேற்றப்படாத நீண்ட கால கோரிக்கைகள்.
வானூர்(தனி):கடந்த 1952 ஆம் ஆண்டிலிருந்து தனித்தொகுதியாக இருந்து வருகிறது வானூர். திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா, சர்வதேச சுற்றுலா நகரமான ஆரோவில், ஆரோவில் கடற்கரை. பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில், திருவக்கரையில் அமைந்துள்ள வக்கிரகாளியம்மன், புதுப்பட்டு அய்யனார் கோயில் போன்றவை தொகுதியின் அடையாளங்கள்.
இந்தத் தொகுதியின் வழியாக ஓடி புதுச்சேரியில் கலக்கும் சங்கரபரணி ஆறு பாசனத்தால் தொகுதியின் பிரதானத் தொழில் விவசாயம். இங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்; வானூரை ஆன்மிக, சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பன பிரதான கோரிக்கைகளாகும்.
கல்குவாரிகள் அதிகம் உள்ள வானூர் பகுதியில், சட்டத்திற்கு புறம்பாக வெடி வைத்து கற்கள் தகர்க்கப்படுவதைக் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும்; தொகுதியின் சிலபகுதிகளில் செயல்படும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து, அங்குள்ள பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வேண்டும்.
விழுப்புரம்: மாவட்டத்தின் தலைநகரமாகவுள்ள விழுப்புரம், வட, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய இடமாகவும் விளங்குகிறது. அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தொகுதி என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது. பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி என்பதால் விவசாயமே பிரதானமான தொழில்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகை செய்யும் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். மாநிலத்தில் நகை செய்யும் தொழிலில் விழுப்புரம் இரண்டாம் இடம் வகிக்கிறது. விழுப்புரம் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு, 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்சாலையோ தொழில் பேட்டைகளோ அமைக்கப்படவில்லை.
12 ஆயிரம் பேர் நேரடியாகவும், 8 ஆயிரம் பேர் மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு பெரும் நகைத் தொழிலை மேம்படுத்த நகைத்தொழில் பூங்கா அமைக்கப்பட வேண்டும்; நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; காஞ்சிக்கு இணையாக சிறுவந்தாடு பட்டு உற்பத்தி செய்யப்படும் விழுப்புரம் தொகுதியில், கூட்டுறவு சங்கம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்; தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; காய்கறி, மீன்சந்தைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்பட வேண்டும்; சென்னை சாலை, கடலூர் சாலை, புதுச்சேரி சாலையை இணைக்கும் வகையில் வெளிவட்ட சுற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்று தொகுதியின் அத்தியாவசியத் தேவை பட்டியல்கள் நீள்கின்றன.
விக்கிரவாண்டி: கிராமப்புரங்களை உள்ளடக்கிய தொகுதி. விவசாயமே பிரதானத் தொழில். அதிகமான அரசி ஆலைகள், தொன்மையான குகைக்கோயில் இந்தத் தொகுதியில் உள்ளன. தொழில்வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் வேலைதேடி புலம் பெயர்ந்து செல்லும் நிலையே உள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும்; விக்கிரவாண்டி, காணையில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும்; அத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்பன தொகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளாகும்.
இந்தத் தொகுதியில் அதிகமான அரசி ஆலைகள் இயங்கி வருவதால், நியாய விலைக் கடைகளுக்கு வாங்கப்படும் அரிசியை அரசு இந்தப் பகுதியில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்; முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக, விக்கிரவாண்டி அண்ணா சிலை அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும்; தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் போன்றவை தொகுதியின் தேவைகளாக உள்ளன.
திருக்கோவிலூர்:விழுப்புரம் மாவட்டத்தின் பெரியத் தொகுதி. தென்பெண்ணையாற்றின் வளத்தால் விவசாயமே பிரதானமான தொழில். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில், சைவத்தலங்களில் புகழ்பெற்ற அஷ்ட வீரட்டானங்களில், 2ஆம் வீரட்டானமான வீரட்டானேஸ்வர் ஆலயம் இத்தொகுதியிலேயே அமைந்துள்ளது.
சங்க இலக்கியங்களில் புகழ்பெற்ற கபிலர் வாழ்ந்த மண் என்ற பெருமையை உடையது. கடந்த 2016ஆம் ஆண்டு தனித்தாலுகாவாக பிரிக்கப்பட்ட கண்டாச்சிபுரம் தாலுகாவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் தவிர, வேறு எந்த அலுவலகமும் ஏற்படுத்தப்படவில்லை. இங்கு அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், பேருந்து சேவை உள்ளிட்டவைகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்; திருக்கோவிலூர் பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க வேண்டும்; விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும்; இங்கு நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பன போன்றவை தொகுதிவாசிகளின் கோரிக்கைகள் ஆகும்.
களநிலவரம்:
தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்டு பரப்பளவில் பெரிய மாவட்டமாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. மாநிலத் தலைநகரையும், தென்மாவட்டங்களையும் இணைக்கும் புள்ளியாக விழுப்புரம் விளங்குகிறது.
செஞ்சி கோட்டையை சுற்றுலாத்தலமாக அறிவிப்பது, திண்டிவனம், விழுப்புரம் ரயில் நிலையங்களை விரிவுபடுத்துவது, பின் தங்கியிருக்கும் மாவட்டத்தில் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவது, சுற்றுலாவை மேம்படுத்துவது என விழுப்புரத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளம். மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில், 4 தொகுதிகள் திமுகவின் வசமும், 3 தொகுதிகள் அதிமுகவின் வசமும் உள்ளன.
இந்த நிலை இந்தத் தேர்தலிலும் அப்படியே தொடரும் என்றே கூறப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்றிருக்கும் அதிமுக, இந்த முறை அமைத்திருக்கும் பாஜக கூட்டணியால் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்திருக்கிறது. வேட்பாளர்களின் தேர்வில் சொந்த தொகுதிவாசிகளை நிறுத்திய எதிர்க்கட்சியின் சமயோஜிதத்தால், அமைச்சர் தொகுதியை அதிமுகவும், வானூர் தொகுதியை விசிகவும் இழக்கலாம் என்கின்றன விழுப்புரம் மாவட்ட அரசியல் ஆரூடங்கள்.