தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளை சேருங்கள்!’ - விவசாயிகள் கோரிக்கை - Yellow to make Pongal a happy day

விழுப்புரம்: பொங்கல் பண்டிகைக்கு மங்கலம் தரும் மஞ்சளுக்கு நல்ல விடிவு காலம் பிறக்க வேண்டும் என விவசாயிகள் வைக்கும் கோரிக்கையை அரசுதான் நிறைவேற்ற வேண்டும்.

pongal celebration
pongal celebration

By

Published : Jan 3, 2020, 11:47 PM IST

தை பொங்கலை சிறப்பிக்கும் மஞ்சள் கொத்துகள் விழுப்புரத்தை அடுத்த காணை பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ளன.

மாதந்தோறும், ஆண்டுதோறும் பண்டிகை என்ற பெயரில் பல்வேறு விசேஷங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆயினும் உலகத் தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருவிழா. இந்தப் பண்டிகையில் மங்கலம் தரும் மஞ்சளுக்கும், இனிக்கும் கரும்புக்கும் தனியிடம் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று புதுப்பானையில் பொங்கல் வைத்து நெல், காய்கறிகள், கரும்புடன், மஞ்சள் கொத்தும் சேர்த்து சூரியனை வழிபடுவது வழக்கம்.

கண்ணீர் வடிக்கும் மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள்

மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள் என்பது தமிழர்களின் நம்பிக்கை. இதுவே பெண்கள் தங்கள் உடலில் மஞ்சள் பூசுவதற்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் புத்தாடைகள், சுபநிகழ்ச்சி பத்திரிகைகள் என மங்களகரமான நிகழ்வுகளிலும் மஞ்சளின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. மேலும், மஞ்சளுக்கு அறிவியல் பூர்வமாகவும் சில காரணங்கள் கூறப்படுகிறது. தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தி மஞ்சளுக்கு உண்டு.

பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் மஞ்சள் வைகாசி மாதம் விதைக்கப்படுகிறது. இந்த மஞ்சள் தை மாதம் பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அறுவடை செய்யப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரத்தை அடுத்த காணை பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் கொத்துக்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

இதுகுறித்து மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயி வெங்கடேசன் கூறுகையில், "இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் எங்களால் முழுமையான அளவில் மகசூல் செய்ய முடியவில்லை. இருந்தும் ஒரு செடியில் கால் கிலோ முதல் அரை கிலோ வரை மஞ்சள் கிழங்குகள் உள்ளன. தற்போது அறுவடைக்கு உள்ள மஞ்சள் கொத்துகளை சென்னை, பெங்களூரு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் விலைக்கு கேட்கின்றனர்.

ஆனால், அவர்கள் கேட்கின்ற விலை எங்களுக்கு லாபம் கிடைப்பதாக தெரியவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் மஞ்சள் கொத்துகளையும் சேர்த்து கொடுத்து விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும். இதுபோல் செய்யும் பட்சத்தில் மேலும் சில விவசாயிகள் மஞ்சள் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள்" என்றார்.

விவசாயி கிருஷ்ணன் கூறுகையில், "நாங்கள் கடந்த வைகாசி மாதம் முதல் மஞ்சள் கொத்துக்களை விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் சரியான மகசூல் இல்லை. இதுவரை எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 75 ஆயிரத்துக்கும் மேல் செலவாகியுள்ளது. ஆனால், தற்போது மஞ்சள் கொத்துகளை விலைக்கு கேட்க வரும் வியாபாரிகள் 5 ரூபாய்க்கும், 10க்கும் கேட்கிறார்கள். அரசாங்க விற்பனைக் கூடத்திலும் போதிய விலைக்கு மஞ்சள் கொத்துகளை விலைக்கு எடுப்பதில்லை.

எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு மஞ்சள் விவசாயிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றார். மஞ்சள் விவசாயிகள் வாழ்வில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் நாமும் தைத்திங்களை மஞ்சளுடன் இனிதே கொண்டாடி மகிழ்வோம்.

இதையும் படிங்க: 70 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை மாற்றிய ஸ்டாலின்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details