விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாவட்ட பொதுக்குழு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.டி.வி. சீனிவாசகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத் ஜி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
திராவிடர்களுக்கு எதிரான நிலைபாட்டில் ஸ்டார் நடிகர்! - விழுப்புரம் காங்கிரஸ் கூட்டம்
விழுப்புரம்: தந்தை பெரியாரை விமர்சனம் செய்வதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் திராவிடர்களுக்கு எதிராக செயல்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் ஜி கூறியுள்ளார்.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய பாஜக அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தேவையான எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. பாஜக அரசு ஜனநாயகத்தை முற்றிலுமாக அழித்து மதவாதக் கொள்கையை அமல்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கைப்பாவையாக பாஜக செயல்படுகிறது. இது இந்தியாவுக்கு பாதுகாப்பானது அல்ல.
மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு அதிமுக தொடர்ந்து ஆதரவளித்து வருவது வேடிக்கையாகயுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும். தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரவுள்ள நடிகர் ஒருவர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளார். அதன் அடிப்படையிலேயே தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஆதரித்துள்ளார். பெரியாரை விமர்சனம் செய்வதன் மூலம் அவர் திராவிடர்களுக்கு எதிரான நிலைபாட்டில் உள்ளார்" என்றார்.