தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று 'வேலைவாய்ப்பு வெள்ளி' என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இம்முகாமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 414 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணியிடங்களுக்கு 9,655 நபர்களைத் தேர்வு செய்துள்ளனர். இவ்வாரத்துக்கான முகாம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளுக்கான சேர்க்கையும் நடைபெறவிருக்கிறது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுய குறிப்புகளுடன் (RESUME) கலந்துகொண்டு பயன்பெறலாம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டம் முடித்த இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெறலாம். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சுயேச்சை வார்டு உறுப்பினரை கடத்த முயற்சி; கட்சியினரிடையே மோதல் - போலீஸ் தடியடியால் பதற்றம்