விழுப்புரம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஜானகிபுரம் பெட்ரோல் நிலையத்தில், கண்டம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் நேற்று (ஜூன் 23) இரவு இரண்டு இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர். தங்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பிய இளைஞர்கள், அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதனைப்பார்த்த பெட்ரோல் நிலைய மேலாளர் கார்த்தி, ''இரு சக்கர வாகனத்தை சற்று தள்ளி நிறுத்திப்பேசுங்கள். மற்றவர்களும் பெட்ரோல் போட வேண்டும்'' எனக் கூறியுள்ளார். ஆனால், மதுபோதையில் இருந்த இளைஞர்கள், ''இங்குதான் நிறுத்துவோம்..'' என வாதம் செய்தபடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் மேலாளர் கார்த்தியை தாக்க முயற்சி செய்துள்ளனர்.
இந்த நேரத்தில் அங்கு டீசல் நிரப்புவதற்காக வந்த வாடிக்கையாளர்களான ஹரிஹரன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர், இதனைத் தட்டிக் கேட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் இளைஞர்கள் பலமாகத்தாக்கியுள்ளனர். தொடர்ந்து பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.