விழுப்புரம் மாவட்டம், மல்லர் கம்பம், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு பெயர் போன மாவட்டம் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சியும் மாணாக்கர்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று விழுப்புரத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
சரியான பயிற்சி கட்டமைப்பு இல்லாத போதிலும் மாணவர்கள் தங்களின் சக்கர கால்களால், கிடைக்கும் சாலைகளில் எல்லாம் பயிற்சி செய்து வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரயில் சந்திப்பு நிலைய வளாகத்தில் பயிற்சி பெற்ற இவர்களுக்குத் தற்போது அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட பெருந்திட்ட வளாகம், குழியான சாலைகளில் பயிற்சி செய்து வருகின்றனர்.
சமதளம் இல்லாத சாலைகளில் பயிற்சி மேற்கொள்வதால் மாணவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பெற்றோர்கள் மிகவும் அச்சமடைந்து தங்கள் குழந்தைகளைப் பயிற்சி பெறுவதற்கு அனுமதிப்பதில்லை. இதனால், 60 பேர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வந்த நிலையில், தற்போது 10 பேர் மட்டுமே பயிற்சி பெறுகின்றனர். மாவட்ட பெருந்திட்ட வளாகம் நடைபாதைப் பூங்காவில், ஸ்கேட்டிங் பயிற்சிக்கென பிரத்யேக கான்கிரீட் மைதானத்தை உருவாக்க கோரிக்கை வைத்து, கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் போராடியும் எந்தப் பலனும் இல்லை.