விழுப்புரம் அருகேயுள்ள வேலியம்பாக்கம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற மன்னாதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீ மிதித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான தீ மிதித்திருவிழா இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கரோனா ஊரடங்கு சமயத்தில் அனுமதி இல்லாமல் நடைபெற்ற திருவிழாவை தடுத்து நிறுத்தினர்.
மேலும் திருவிழாவை ஏற்பாடு செய்த வேலியம்பாக்கம் ஊர் நாட்டாமை, கோயில் தர்மகர்த்தா மற்றும் பூசாரி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் கோயில்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.
கோயில்களில் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து வழிபாடுகள் நடத்த மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி தீ மிதித் திருவிழா நடைபெற்றது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.