கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-தீபா தம்பதி. இவர்களுக்கு ஒரு வயதில் ஜஸ்மிதா என்ற மகள் உள்ளார். ராஜேஷ் கேரள மாநிலத்துக்கு கூலி வேலைக்குச் சென்றுவிட்டதால் குழந்தை ஜஸ்மிதாவுடன் தீபா வசித்துவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஜஸ்மிதா தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஜஸ்மிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். பின்னர் அவருக்கு சிகிச்சைகள் முடிந்த நிலையில் குழந்தை ஜஸ்மிதாவுடன், தீபா நேற்று வீட்டுக்குப் புறப்பட்டார். ஆனால், ஊரடங்கால் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாத நிலையில் புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்தே செல்ல முடிவுசெய்து, விழுப்புரம் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார்.