விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில்செயல்பட்டு வரும் அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெற்றோர்களின் சார்பாக ஒருவர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.
குறிப்பாக, இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தகாத முறையில் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதை தலைமை ஆசிரியர் வாடிக்கையாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர், மூன்று தினங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் தங்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதை பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனினும், போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், பெற்றோரிடம் ஆசிரியர் மீது வழக்கு தொடர்வதால் உங்களது குழந்தையின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் எனக்கூறி புகாரைத் திரும்ப பெற வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.