விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசுக் கல்லூரி மாணவர் நேற்று(ஜூலை 19) கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி மாணவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவமும், கள்ளக்குறிச்சி கலவரச் சம்பவம் போல அசம்பாவிதமாக மாறிவிடக்கூடாது என்ற முனைப்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடனடியாக காவல் துறையினரைத் தொடர்பு கொண்டார். மாணவர் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா உத்தரவின் பேரில், விழுப்புரம் காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை சம்பவத்தில் தொடர்புடைய வீரமணி, சரத்ராஜ், சத்யா, கீர்த்தி வர்மன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். ஐந்து மணி நேரத்தில் நால்வரையும் கைது செய்த காவல்துறை அலுவலர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.