விழுப்புரம்:திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாதிமங்கலம் ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எல்லீஸ் அணைக்கட்டு உடைந்ததன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் எல்லீஸ் சத்திரம் அணைகட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை மழையின் காரணமாக அணை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஏனாதிமங்கலம், எரலூர், செம்மார், பேரங்கியூர், கப்பூர், உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும் அவல நிலையில் உள்ளன.
மேலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலைமை உள்ளதால் மணல் குவாரி வேண்டாம் என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில், மீண்டும் தற்போது எல்லீச்சத்திரம் அணை பகுதியில் நான்காவது முறையாக மணல் குவாரி அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஏனாதிமங்கலம் ஊராட்சி மன்றம் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.