தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2020, 11:45 AM IST

ETV Bharat / state

108 வயது மூதாட்டியின் பெருங்கனவை நிறைவேற்றிய விழுப்புரம் எஸ்.பி!

விழுப்புரம்: தனது மகன் தன்னிடமிருந்து அபகரித்த நிலத்தை மீட்டு, தனக்கும் தன் மகள்களுக்கும் வாழ்வாதாரம் அளிக்கவேண்டும் என 108 வயது மூதாட்டி அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

Vilapuram S.P fulfilled  dream of 108 year old women
Vilapuram S.P fulfilled dream of 108 year old women

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கிருஷ்ணவேணி (108). இந்த தம்பதிகளுக்கு கணேசன் என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணவேணி, தனது மகன் கணேசன் தன்னையும், தனது கணவரையும் ஏமாற்றி 70 சென்ட் நிலத்தை அபகரித்ததுடன், தன்னை கடைசி காலத்தில் பராமரிக்க மறுப்பதாகவும் கூறி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்திருந்தார். அந்த மனுவில், தான் கடைசி காலத்தில் தனது மகள்களுடன் வாழ நினைப்பதாகவும், தன்னுடைய 70 சென்ட் நிலத்தை மூன்று மகள்களுக்கு பாகம் பிரித்து கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புகார் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மூதாட்டியின் மகனான கணேசனிடம் பேசி, அவரது மூன்று சகோதரிகளுக்கும் நிலத்தை பிரித்து கொடுப்பதற்கு சம்மதம் பெற்றார். இதையடுத்து, மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்ற மாவட்ட கண்காணிப்பாளர் அவரது விருப்பப்படி நிலத்தின் பங்குகளை மூன்று மகள்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான பத்திரத்தை அளித்தார். மேலும், மூதாட்டிக்கு தேவையான உணவுப் பொருள்களையும் வழங்கினார்.

உணவுப் பொருள்களை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்

தனது புகார் மனு மீது நேரில் வந்து உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு, மூதாட்டி கிருஷ்ணவேணி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். இந்த விசாரணையின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ், விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details