தமிழ்நாட்டில் காலியாக இருந்துவரும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தியை அக்கட்சி தலைமை நேற்று அறிவித்தது. இதையடுத்து, திமுகவின் நேரடி அரசியல் எதிரியான அதிமுகவும் தற்போது தனது வேட்பாளரை அறிமுகம் செய்திருக்கிறது. அதிமுக வேட்பாளராக விழுப்புரம் கானை பகுதி ஒன்றிய கழக செயலாளர் முத்தமிழ்செல்வனை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
யார் இந்த முத்தமிழ்ச்செல்வன்?
விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் ரங்கநாதன்- இந்திரா தம்பதியருக்கு 1965ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். இவரது மனைவி அமுதா. இவருக்கு பிரபாகரன் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.
இவரது தாய் 1985 முதல் 1991 வரை கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இதேபோல் இவரது தந்தை 2006 முதல் 2011 வரை கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார்.