தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு! - உளுந்தூர்பேட்டை விபத்து

விழுப்புரம்: உளுந்தூர்ப்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ulunthurpettai accident
ulunthurpettai accident

By

Published : Jan 20, 2020, 11:10 AM IST

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கல்வி அதிபர் ஐசக் என்பவர் தூத்துக்குடிக்குச் சென்று தனது காரில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சி என்ற கிராமம் அருகே வந்தபோது அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசி வந்ததால், எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் மோதினார்.

இதையடுத்து ஐசக் காரை நிறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். விபத்துக்குள்ளான காரும் அரசுப் பேருந்தும் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அதிகாலையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும், அரசுப் பேருந்தின் பின்பகுதியிலும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உளுந்தூர்ப்பேட்டை விபத்து

இந்நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்களை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே நின்றதால் சென்னை-திருச்சி நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details