விழுப்புரம்:சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக காரைக்குடிக்கு நாள்தோறும் பல்லவன் அதி விரைவு ரயில் சென்றுவருகிறது. இந்நிலையில் நேற்று(ஏப். 15) மாலை வழக்கம்போல் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் அதிவிரைவு ரயில் புறப்பட்டது.
இந்த ரயில் விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரயில்வே கேட் அருகில் மாலை வந்தபோது, ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம்செய்த இரண்டு பேர், திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனே அங்கிருந்த ரயில்வே கேட் கீப்பர், இதுபற்றி விழுப்புரம் ரயில்வே காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் ரயில்வே காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் ஒருவர் திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த அருண்(22) என்பதும், மற்றொருவருக்கு 30 வயது இருக்கும் என்றும் தெரிகிறது.
ஆனால், அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. அவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்துள்ளது காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் இருவரின் உடலையும் காவலர்கள் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு: கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு!'