விழுப்புரம்:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நேற்று(நவ.06) நடைபெற்றது. விழுப்புரம் ஆனந்தா திருமண மஹாலில் நடைபெற்ற விழாவை, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'வசதி வாய்ப்பு குறைவால் வளையகாப்பு விழாவை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்காக, சமுதாய வளைகாப்பு விழா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 12,176 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், பூ, வளையல், பழங்கள், இனிப்புகள் மற்றும் பலவகை சாதங்கள் வழங்கப்பட்டன.
வீட்டிலேயே குழந்தை பெற்ற காலம்மாறி, இன்றைக்கு அரசு மருத்துவமனைகளில் குழந்தைபெறும் நிலை உருவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, பதிவு செய்த கர்ப்பிணிகள் 90 விழுக்காடு பேருக்கு அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ வசதிகள், மருத்துவமனைகள் நிறைந்திருக்கின்ற இந்த காலத்தில், கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தங்கள் கர்ப்பத்தைப்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,751 அங்கன்வாடி மையங்களில் இதுவரை 12,176 கர்ப்பிணிகள் பதிவு செய்திருக்கின்றனர். கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு ரூ.18 ஆயிரம் வழங்கி வருகிறது. எனவே, அளவோடு பெற்று வளமோடு வாழ்வதற்கு, இல்லற வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு, இரண்டு குழந்தைகள் போதும் என்பதை கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.