தமிழ்நாட்டில் மழலையர் பள்ளி முதல் இறுதி வகுப்பு வரை அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் விழுப்புரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணி,
"தமிழ்நாடு அரசு அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பிரிவுகளை கொண்டு வந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதனால் முதல் தலைமுறையில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். உலகில் எந்த ஒரு நாட்டிலும் தாய்மொழியை புறந்தள்ளிவிட்டு மற்ற மொழிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.
ஆங்கில வழிக்கல்வி திணிக்கப்படுவதற்கு எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இங்கு கல்வி வியாபாரமாகிவிட்டது. பெற்றோர்களிடம் ஆங்கில மோகம் அதிகளவு காணப்படுகிறது. ஆங்கிலத்தில் படித்தால் தான் அறிவாளிகளா? சில பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி மட்டுமே இருப்பதால் அதிகளவில் அடித்தட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மொழியைப் பொறுத்தவரையில் நாம் இன்னும் இருண்ட காலத்தில் உள்ளோம். திராவிட இயக்கங்கள் ஆட்சியை பிடித்ததே மொழியை வைத்துதான்.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஓன்றாம் வகுப்பில் 33 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் வழி கல்வி பயின்று வருகின்றனர். மொழியின் சிறப்பு பயிற்றுமொழியாக இருப்பதுதான். சமூக முன்னேற்றத்துக்கு தாய்மொழிக் கல்விதான் அவசியம். இதை உணர்ந்து அடித்தட்டு மக்களின் பிரச்னைகளில் அக்கறை உள்ள இயக்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அடித்தட்டு மக்களுக்கு ஆங்கில வழி கல்வி கொடுப்பது அவர்களுக்கு விஷம் கொடுப்பதற்கு சமம்.
சமூக முன்னேற்றத்துக்கு தாய்மொழிக் கல்விதான் அவசியம் - பேராசியர் கல்யாணி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டுவரப்பட்டுள்ளதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தாய்மொழியில் கல்வி பயில வேண்டும் என்பது கல்வி உரிமை சட்டம். அரசாங்கத்தின் இந்த செயல் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிராக உள்ளது'' என்றார்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் துணைத் தலைவர் நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பொருளாளர் மு.நாகராஜன், தலைவர் இளங்கோவன், பொதுச்செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் ஆதிமூலம், துணை செயலாளர் சிவகாமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பழங்குடி இருளர் மக்கள், அவரது குழந்தைகள் என நூற்றுக்கணக்காணோர் கலந்து கொண்டனர்.