விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகேயுள்ள அயன்வேலூர், எலவானசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருமுண்டீஸ்வரம் கோயில் ஆகியவற்றில் கடந்த மாதம் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடுபோனது. இந்தச் சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இருளர்கள் 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் இருளர்களைக் கடத்தி, அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, சித்ரவதை செய்வதாகக் கூறி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழங்குடியினர் ஆர்ப்பாட்டம் அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் மாவட்ட காவல் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் பேராசிரியர் கல்யாணி, “காவல் துறையில் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை இருளர், குறவர், ஒட்டர் போன்ற நலிந்த பழங்குடி சமூகத்தினர் மீது போட்டுவருவது தொடர்கதையாகி-வருகிறது. 1993 முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இதுபோன்ற முறையில் போடப்பட்டுள்ளன. இதுவரை இதில் ஒரு வழக்கில் கூட குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
பழங்குடியினர் கோயிலில் திருடியதற்கான காட்சிப் பதிவுகள் காவல் துறையிடம் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறிவருகிறார். அப்படியானால் அவற்றை நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் வெளியிட்டு உண்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு பொய் வழக்குகள் போடக்கூடாது.
பழங்குடியினர் மீது பொய் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு, அதில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.