விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் வானூர் கணபதியை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர், 'நாம் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தல் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து மினி சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலோடு 33 பேர் சேர்ந்து நடத்துகின்ற பழனிசாமி கம்பெனி முடிவுக்கு வந்துவிடும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இவர்கள் துரோகம் செய்துவருகின்றனர்.
டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை உண்மையான தொண்டர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்; அவர்களிடம் டெண்டர் பார்ட்டிகள் மட்டுமே உள்ளனர். ஜெயலலிதா கொண்டுவந்த எந்தத் திட்டத்தையும் இவர்கள் செயல்படுத்தவில்லை. மோடியைப் பார்த்து பழனிசாமி, பன்னீர்செல்வம் பயப்படுகின்றனர். ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் வைக்கக்கூடாது என்று கூறிய தேமுதிக மற்றும் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பாமகவுடன் இவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறிய ராமதாஸ் தற்போது எந்த நிலையில் உள்ளார்? அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தாய்கூட இவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள், பரிசு பெட்டி சின்னத்துக்கு தான் வாக்களிப்பார்கள். தமிழ்நாடு மக்கள் துரோகத்துக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். இதற்கு ஆர்.கே.நகர் வெற்றியே சாட்சி. மக்கள் விழிப்புடன் உள்ளனர்.
தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற பாஜக வெற்றிபெற முடியாது. கடந்த தேர்தலில் தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநில மக்களும் மோடியின் வாய் தாளத்துக்கு ஏமாந்து வாக்களித்தனர். ஆனால், தமிழ்நாடு மக்கள் அதிமுகவுக்கு வாய்ப்பளித்தனர். தமிழ்நாடு அரசியல்வாதிகளை விட மிகப்பெரிய ஏமாற்றுக்காரராக மோடி இருக்கிறார். இந்திய இளைஞர்கள் அவர்மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
ஆளும் கட்சிகள் தொலைக்காட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ அமமுகவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும். சிறுபான்மையினரின் பாதுகாவலராக நடித்துக் கொண்டிருந்த திமுகவின் முகத்திரை கிழிந்துவிட்டது. ராகுல் காந்தி பிரதமர் என காங்கிரஸ் கட்சியினரோ, இடதுசாரிகளோ, சந்திரபாபு நாயுடுவோ, மம்தா பானர்ஜியோ சொல்லவில்லை.
மோடியே நினைத்தாலும் இனி அவரால் பிரதமராக முடியாது. காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டைவேடம் போடுகிறது. தேசிய கட்சிகளை நம்பி தமிழ்நாட்டிற்கு பயனில்லை. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாம் அனைவரும் நிம்மதியாக வாழ முடியாது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியாது என பியூஷ் கோயல் தெளிவாக தெரிவித்துவிட்டார். இந்தூர் மருத்துவக் கல்லூரி வழக்கிலிருந்து தன் மகனை விடுவிக்கவே பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார்' என்று பேசினார்.