விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அய்யந்தோப்பில் உள்ள தாங்கல் ஏரியில் நேற்று (ஜன.06) இரவு ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த மழைநீரானது முழுவதும் வெளியேறி, வயல்வெளி பகுதியில் சூழ்ந்து செஞ்சி சாலையில் உள்ள காந்திநகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த வெள்ளநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும் சாலை முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. குறிப்பாக அய்யந்தோப்பில் உள்ள தாங்கல் ஏரி கரையில் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று கடந்த சில வருடத்திற்கு முன்பு அகற்றப்பட்டது. கரையில் மரம் அகற்றப்பட்ட இடத்தில் கரை சேதமடைந்து வருடாந்திரம் நீர் வெளியேறி வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் வருவாய் துறையினரிடம் புகார் மனு அளித்தும், நேரில் சென்று புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
திண்டிவனம் ஏரிக்கரை உடைப்பு... குடியிருப்பில் புகுந்த வெள்ள நீர்! - Villupuram District News
விழுப்புரம்: திண்டிவனத்தில் ஏரியின் கரை உடைந்து குடியிருப்பில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பொதுமக்கள் இதுகுறித்து கூறுகையில், ’வருடாந்திர மழை காலங்களில் குடியிருப்பில் வெள்ள நீர் புகுந்து அவதிக்கு உள்ளாகி வருகிறோம். மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து அவதிப்படும் நேரத்தில் அலுவலர்கள் சாலையில் நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர். அதுபோல நேற்று (ஜன.06) இரவு ஒரு மணி அளவில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. ஆனால் இன்று காலை 10 மணிவரை அரசு அலுவலர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை’ என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி