தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் லாட்டரி விற்பனை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தொழில்நுட்ப வசதியோடு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ள ஆன்லைன் லாட்டரிகள் பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சமீபத்தில் லாட்டரிச் சீட்டு மோகத்தில் சிக்கி விழுப்புரம் அருகே இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.
சட்டவிரோத லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்பவர்களை கண்காணிக்க 10 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 20 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக தனிப்படை மூலம் தீவிர கண்காணிப்பு வேட்டை மேற்கொண்டதில் கள்ளத்தனமாகவும், சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் வி.மருதூரைச் சேர்ந்த தென்றல் சம்பத், மகாராஜபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த முத்துக்குமரன், கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார், கே.கே.நகரை சேர்ந்த சங்கர் உள்பட 13 நபர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் இதுவரை 20 நாட்களில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையில் 70 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 73 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறி சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவர்களை ஓராண்டு தடுப்புக் காவலில் அடைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை - சேலத்தில் பரபரப்பு!