ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தை கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்களாக பிரித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து விழுப்புரத்துக்கு அருகில் இருந்த திருவெண்ணைநல்லூர், திருநாவலூர், முகையூர் உள்ளிட்ட பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
விழுப்புரத்திலிருந்து 6 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவெண்ணைநல்லூரை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்தால், எங்களுடைய அத்தியாவசிய தேவைக்கு தினமும் 100 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்திருந்தனர். மேலும் மக்களின் உணர்வுகளை அறிந்து மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனிதச் சங்கிலி, கருப்பு கொடி ஏந்தி போராட்டம், கையெழுத்து இயக்கம், முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என இரண்டு கோட்டமும், விழுப்புரம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர் மரக்காணம் ஆகிய தாலுக்காக்களும் இம்மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதேபோல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் இணைக்கப்பட்ட இரண்டு வருவாய் கோட்டங்கள் அதாவது கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் இதில் உள்ளடங்கும். மேலும் ஆறு தாலுகா அதாவது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகாவாக கல்வராயன்மலை உருவாக்கபட்டுள்ளன.
பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து கொண்டாடிய மக்கள் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரசூர் கூட்ரோட்டில் விழுப்புரம் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பொதுமக்கள் கொண்டாடினர்.
இதையும் படிங்க...ஆட்கொல்லி 'அரிசி ராஜா'வை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத் துறை!