விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது. அந்த பொறுப்புணர்வுடன் திமுக தலைமையிலான கூட்டணி உருவாகியுள்ளது. இந்த தேர்தலின் செயல்திட்டம் 'மீண்டும் வேண்டாம் மோடி' என்பதுதான். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற கொள்கையோடு நாம் இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.
நம் எதிரில் உள்ள கூட்டணி, வியாபாரிகள் கூடி உருவாக்கியுள்ள கூட்டணி. பேரம் படிந்தபிறகு உருவாக்கப்பட்ட கூட்டணி. ஆனால், நமது கூட்டணி கொள்கைக் கூட்டணி. எதிர்தரப்பில் பொருந்தா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இலை, பூ, கனி என அவர்களின் சின்னமே அதற்கு சாட்சி. ஆனால் நமது கூட்டணி இயற்கையான கூட்டணி. 'சூரியனு'க்கு பொங்கல் வைக்க 'பானை' தேவை. பானையை அடுப்பில் வைக்க 'கை' தேவை. பானையில் போடும் அரிசியை அறுவடை செய்ய 'கதிர் அரிவாள்' தேவை. இந்த விவசாய குடும்பங்கள் வாழ்வில் முன்னேற 'ஏணி' தேவை. நமது கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. நமது வெற்றியை தடுக்க எதிரிகள் சூழ்ச்சி செய்வார்கள். நாட்டு மக்களும், நாட்டில் உள்ள கட்சிகளும் மோடிக்கு எதிராக உள்ளனர். தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது.
நாமெல்லாம் பெண்களுக்கு எதிரானவர்கள் போன்ற அவதூறை தேர்தல் நேரத்தில் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் பேச்சு மக்களிடத்தில் எடுபடாது. வாக்குகளை கலைக்க, பணம் கொடுக்க உங்கள் இல்லங்களை தேடி வருவார்கள். மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்து விலை பேசுகிறார்கள். 1 விழுக்காடு 100 கோடி, 5 விழுக்காடு 500 கோடி. பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சமுதாயத்தினர் அளித்த வாக்குகளை விழுக்காடு கணக்கில், கோடிக் கணக்கில் விற்பனை செய்துவிட்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். நான் 'பானை' சின்னத்தில் போட்டியிட்டாலும், ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று விருப்பப்பட்டேன். நான் நாடாளுமன்றம் போகாவிட்டாலும், ரவிக்குமார் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். 2001ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், நான் சமயநல்லூர் தொகுதியை கேட்டபோது, எனக்கு மங்களூர் தொகுதியை ஒதுக்கி என்னை வெற்றிப்பெற வைத்தார் கருணாநிதி. இந்த நிகழ்வு விசிக வரலாற்றில் ஒரு திருப்புமுனை. முதன்முதலாக தமிழக சட்டப்பேரவையில் விசிக அடி எடுத்து வைக்க வாய்ப்பளித்தது கருணாநிதியும், உதயசூரியன் சின்னமும்தான்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து, ஜனநாயகத்துக்கு ஆபத்து, சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் எந்த மாநிலத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாது. மக்களவைத் தேர்தல் நடைபெறாது அதிபர் ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்படும். இந்துக்களின் முதல் எதிரியே பாஜகவும், மோடியும்தான்” என்றார்.
இந்த நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர்ஷா நவாஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.