தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஞ்சி அருகே கோயில் பிரச்னை... இரு பிரிவினரிடையே மோதல்: போலீசார் குவிப்பு! - Villupuram District News

செஞ்சி அருகே கோயில் பிரச்னை தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

செஞ்சி அருகே கோவில் பிரச்சினை இரு பிரிவினரிடையே மோதல்: போலிசார் குவிப்பு
செஞ்சி அருகே கோவில் பிரச்சினை இரு பிரிவினரிடையே மோதல்: போலிசார் குவிப்பு

By

Published : Nov 20, 2022, 11:00 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல் அத்திப்பாக்கத்தில் மாரியம்மன் கோயில், கிருஷ்ணர் கோயில் இரண்டும் அருகருகே அமைந்துள்ளன. இந்நிலையில் கிருஷ்ணர் கோயில் முன்பு தகரத்தால் மேற்கூரை போடுவதற்கு அந்தக் கோயிலை வழிபடும் ஒரு சமூகத்தினர் ஏற்பாடு செய்தனர்.

இதற்கு மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் எதிர்ப்புத்தெரிவித்தனர். ஏனெனில், அங்கு மேற்கூரை அமைத்தால் தங்களது கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யும்போதும், கோயிலைச் சுற்றி வருவதற்கும் போதிய இடவசதி இல்லாமல் போய்விடும். எனவே, கிருஷ்ணர் கோயில் முன்பு மேற்கூரை அமைக்கக் கூடாது என்று தெரிவித்து வருகின்றனர்.

ஆகையால், கடந்த 6 மாதங்களாக இப்பிரச்னை நீடித்துவரும் நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணர் கோயில் தரப்பில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், மேற்கூரை அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று (நவ.19) கிருஷ்ணர் கோயில் முன்பு தகரத்தால் கூரை அமைக்க அவர்கள் முற்பட்டனர். இதற்கு மாரியம்மன் கோயிலை வழிபடுபவர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்டனர்.

இதனால், இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செஞ்சி பிரியதர்ஷினி மற்றும் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும், செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா தலைமையில் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இருபிரிவினரிடையே அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் யாருக்கும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இதையடுத்து மாரியம்மன் கோயிலை வழிபட்டு வருபவர்கள் தரப்பில் பெண்கள் மட்டும் கோயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை பெண் போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்களிடம், நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து உரிய அனுமதியின் பெயரில் தான் தற்போது இங்கு அவர்கள் மேற்கூரை அமைத்து வருகிறார்கள். எனவே, அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் பின்னர் அவர்கள் கிருஷ்ணர் கோயில் முன்பு மேற்கூரையை அமைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: கொடைக்கானலில் 150 அடி ஆழத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி!

ABOUT THE AUTHOR

...view details