விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது.
இதில், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ? அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம், அக்கிராம மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள ஆலமரத்தடியில் நடைபெற்றது.
ஊர் முக்கியஸ்தர்கள் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஏலத்தை தொடங்கினர். காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் ஒரு மணி வரை ஏலம் நடைபெற்றது. இதன் நிறைவாக, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கு ரூ.14 லட்சத்திற்கு ஏலம் முடிவு செய்யப்பட்டது.