விழுப்புரம்: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து 1.2.2023 மற்றும் 2.2.2023 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 15.2.2023 மற்றும் 16.2.2023 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 5.3.2023 மற்றும் 6.3.2023 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (26.4.2023) விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம், திண்டிவனம் வெண்மணியாத்தூர் சிட்கோ தொழில்முனைவோர் சங்கம், கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஈஜடி பாரி கரும்பு விவசாயிகள் சங்கம், சிறு, குறு முதலீட்டாளர்கள், மீனவப் பிரதிநிதிகள், கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலம் அரிசி ஆலை அதிபர்கள் சங்கங்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் சங்கம், பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
விழுப்புரத்தில் ஐடி பார்க்: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் விழுப்புரம் நகரத்தில் ஐடி பார்க்(IT Park) அமைக்க வேண்டும் என்றும், கனரக தொழில் நிறுவனங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அமைத்திட வேண்டும் என்றும், பாசன விளைநிலம் இல்லாத பகுதிகளை கண்டறிந்து சிட்கோ மூலம் தொழில்பேட்டை அமைத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்தனர்.
2 ஆயிரம் கோடியில் காலணி தொழிற்சாலை:கள்ளக்குறிச்சி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் சங்கத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் ரூபாய் 2,302 கோடியில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு மாவட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தெருவிளக்குகளை சீர் செய்திடவும், உற்பத்தி தொடங்கிய தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கிடவும் ஆவன செய்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொழில்முனைவோர் மற்றும் விவசாய சங்கத்தின் கோரிக்கை: திண்டிவனம் வெண்மணியாத்தூர் சிட்கோ தொழில்முனைவோர் சங்கத்தின் சார்பில் திண்டிவனத்தில் 51 மருத்துவமனை அமைத்திட வேண்டும். திண்டிவனம் சிட்கோ- விற்கு தனி துணை மின்நிலையம் அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். விவசாய சங்கங்களின் சார்பில் அனைத்து கால்வாய்களையும் தூர்வாருவதற்கு ஆவன செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், கடல்நீர் ஊடுருவலை தடுக்க கொள்ளிடம் ஆற்று முகத்துவாரங்களில் தரைமட்ட தடுப்பணை அமைக்க வேண்டும். முந்திரி, வாழை, பலா போன்ற வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி வருவாய் ஈட்ட தொழில் சார்ந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். கரும்பு விவசாயத்திற்கான சொட்டு நீர் பாசனத்திற்கு வழங்கப்படும் மானியத்தை ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அனைத்து சிறு தானியங்களை விற்பனை செய்திட வேண்டும்.