தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏளனமாக சிரிப்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பேன்! நம்பிக்கை கீற்று பார்த்தியம்மாள்! - பூம்பூம் மாட்டுக்காரர் சமூகத்தில் முதல் பட்டதாரி

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பூம்பூம் மாட்டுக்காரர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக கல்லூரிப் படிப்பை எட்டிப்பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரை பற்றிய ஒரு செய்திதொகுப்புதான் இது..

parthiyammal
parthiyammal

By

Published : Mar 22, 2020, 2:38 PM IST

Updated : Mar 22, 2020, 2:56 PM IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள இந்திராநகர் குடியிருப்பில் பூம்பூம் மாட்டுக்காரர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சமூகத்தின் கீழ்நிலையில் இருக்கும் இவர்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஓரளவுக்கு கிடைத்திருக்கும் பட்சத்தில், கல்வி இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

அவ்வாறு எவரேனும் தடையை மீறி படித்தாலும் எட்டாம் வகுப்போ அல்லது பத்தாம் வகுப்பு வரைதான் அவர்களின் உச்சபட்ச படிப்பாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் இருந்து விடுபட்டு கல்லூரிக் காற்றை சுவாசிக்க வந்துள்ளது பார்த்தியம்மாள் எனும் ஒரு இளம் பறவை.

ஆசிரியராகும் கனவோடு கல்லூரிப்பயணத்தைத் தொடரும் பார்த்தியம்மாள்!

ஆலங்குப்பம் குடியிருப்பைச் சேர்ந்த ரவி-பொன்னியம்மாள் தம்பதியரின் மகள்தான் இந்த பார்த்தியம்மாள். இவருக்கு 2 அண்ணன், 2 தம்பி, 1 தங்கை என 5 பேர் உடன்பிறந்தவர்கள் உள்ளனர்.

ஆலங்குப்பம் அரசு பள்ளியில் 414 மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பை முடித்து, பிரம்மதேசம் பள்ளியில் 272 மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பும் தேர்ச்சி பெற்று, தற்போது திண்டிவனம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயின்று வருகிறார் பார்த்தியம்மாள்.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பார்த்தியம்மாள்.

பார்த்தியம்மாளின் தந்தை ரவி பாத்திரம் விற்பனை செய்து வருகிறார். காலையில் ஆறு மணிக்கு சென்று பாத்திரங்களை விற்பனை செய்து கொண்டு வரும் பணத்தில்தான் பார்த்தியம்மா கல்லூரிக்குச் செல்ல முடியும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பார்த்தியம்மாள் குடும்ப வறுமையின் காரணமாக படித்தது போதும் என்று குடும்பத்தினர் கூறிய போது, பிடிவாதமாய் நான் கல்லூரி செல்வேன் என்று முதல் பட்டதாரி பட்டத்தை தன் சமூகத்திற்காக சுமக்க ஆவலோடு காத்திருக்கிறார்.

இந்த சமூகத்தில் பிறந்த ஆண், பெண் யாராக இருந்தாலும் பல்வேறு சாதிய ஒடுக்குமுறை, சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு தங்களது கல்விப் படிப்பை முடிக்க முடியாமல் போகிறது. உளவியல் ரீதியான பாதிப்புகளை தாண்டி, முதன் முறையாக பூம்பூம் மாட்டுக்காரர் சமூகத்தில் இருந்து கல்லூரிப் படிப்பை எட்டி பிடித்துள்ளார்.

கல்லூரிப்படிப்பை எட்டிப்பிடித்த பூம்பூம் மாட்டுக்காரர் சமூகப் பெண்

இதுகுறித்து பாரத்தியம்மாள் கூறுகையில், "நான் கல்லூரி செல்வதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால், இந்த சந்தோஷத்தை எனது சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் அடைய வேண்டும் என்பதே எனது ஆசை. கல்வி மட்டுமே எங்களது சமூகத்தை முன்னேற்றம் அடைய செய்யும்.

எங்களை பார்த்து ஏளனமாக சிரிப்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். தான் கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு ஆசிரியராக மாற வேண்டும். அதன் மூலம் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்பதே தனது ஆசை" என்றார்.

ஒருவர் கற்ற கல்வி அவரைச் சார்ந்த சமூகத்துக்கு பயன்படும் போதுதான், அந்த கல்வி முழுமையடையும் என்று சொல்வார்கள். அதுபோல பார்த்தியம்மாளின் கல்வியறிவு அவர் சார்ந்த சமூக மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

ஆதியினம் பூம்பூம் மாட்டுக்காரர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான சாதி சான்றிதழ் கிடைக்காததால் அவர்களால் மேல்படிப்பு படிக்க முடிவதில்லை என்றும், எளிதான முறையில் சான்றிதழ் கிடைத்தால் மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வருவார்கள் என்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:முட்டை சாப்பிட்டால் கரோனா பரவாது - ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவி அசத்தல்!

Last Updated : Mar 22, 2020, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details