உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் மட்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு கடந்த 7ஆம் தேதி உத்தரவிட்டது. 2 நாட்கள் மதுக்கடைகள் செயல்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னையை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 124 டாஸ்மாக் கடைகளில், கரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் செயல்படும் 84 கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டன.
இதையடுத்து, மதுபிரியர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதற்கிடையில் விழுப்புரம் - புதுச்சேரி எல்லையையொட்டி இருந்த மதுபானக் கடைகளில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, புதுச்சேரியை சேர்ந்த மதுப்பிரியர்களும் அதிகளவில் வந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: கரூரில் வெறிச்சோடிய அரசு மதுபானக் கடை