விழுப்புரம்:ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று (ஜூலை 14) நிலவை ஆராயும் பொருட்டு, ரூ.615 கோடி மதிப்பிலான சந்திரயான் 3 விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வெற்றிகரமாக புவி நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகவும், அதன் இயக்கம் திருப்திகரமானதாக இருப்பதாகவும் இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கான பணியில் அயராது பாடுபட்ட (ISRO) இஸ்ரோவின் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, இஸ்ரோவில் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் 'சந்திரயான்-3' திட்ட இயக்குனராக பொறுப்பேற்று அதனை வழிநடத்தி சென்ற விதம் இந்தியா மட்டுமின்றி தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்து உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த பழனிவேல் - ரமணி தம்பதியினரின் மகன் வீரமுத்துவேல், இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்து வருகிறார். மேலும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேல் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் (SRMU) மத்திய செயல் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், கணவன், மனைவி ஆகிய இருவரும் இருவரும் விழுப்புரத்தில் வசித்து வருகின்றனர். இதனிடையே, வீரமுத்துவேல் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கிய திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்று வழி நடத்தியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் இதுகுறித்து பேசியதாவது, 'உலகமே வியந்து உற்றுநோக்கிய சந்திராயன் 3 நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான முக்கிய திட்ட இயக்குனராக என்னுடைய மகன் நியமிக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக இது குறித்த ஆராய்ச்சி செய்து முழுமையான அர்ப்பணிப்புடன் இணைந்து செயல்பட்டு வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளனர். இஸ்ரோவின் சார்பில் தனது மகன் தலைமையிலான குழுவினர் இப்பணியில் அற்புதமாக செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.