விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூர் அருகே இருக்கும் மேல்பாதி என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த ஊரின் காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், திரெளபதி அம்மன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அதே பகுதியில் வசித்து வரும் வேறு ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
அந்த நேரத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குப் பட்டியலினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் வாழ்ந்து வரும் பட்டியலின மக்களிடையேயும், மற்றொரு சமுதாய மக்களிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. எனவே, இந்த இருதரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.