விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுப.வீரபாண்டியன் திண்டிவனம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பிரதமர் மோடி கூட்டணிக் கட்சியில் உள்ளவர்களுக்கு பரப்புரை செய்யாமல், பாஜக வேட்பாளர்களுக்கு மட்டுமே பரப்புரை செய்கிறார். பாஜக தொண்டர்கள் பதாகைகளில் மோடியின் படத்தை அச்சிடுவது இல்லை, மாறாக ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படத்தை மட்டும் அச்சிட்டு வாக்கு கேட்கிறார்கள்.
புதுச்சேரியில் தமிழில் பேசிய மோடி ”வீர வேல் வெற்றி வேல்” என்று பேசுகிறார். தமிழ்நாட்டில் பாஜக வேல் ஊன்றி நின்றாலும் ஒருபோதும் வேர் ஊன்ற முடியாது, ஏனென்றால் இது பெரியார் மண். பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் தமிழில் பாட நூல் நடத்தப்படும் என பிரதமர் புதுச்சேரியில் கூறியுள்ளார்.
ஆனால், 1996ஆம் ஆண்டு தமிழில் பாடத்திட்டத்தை கலைஞர் கொண்டு வந்துவிட்டார். மரக்காணம் பகுதியில் மகளிர் கல்லூரி கொண்டு வரப்படும். உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் நலன் கருதி, அயோடின் உப்பு உற்பத்தி ஆலை தொடங்கப்படும், மீனவர்களுக்கு மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறாமல், திமுகவினர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. இது அதிமுகவிற்கும் திமுகவிற்குமிடையெ நடக்கின்ற தேர்தல் என்பதற்கு பதில், இரண்டு கொள்கைகளுக்கு எதிராக நடக்கும் போர் என்று கருதலாம்.
மக்கள் நீதி மய்யத்திடம் டார்ச் லைட் மட்டும் தான் உள்ளது. பேட்டரியோ மோடியிடம் தான் உள்ளது. ’தான் ஒரு விவசாயி’ எனக் கூறும் முதலமைச்சர், அவர் அளித்த வேட்பு மனுவில் ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லை எனக் கூறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஏக்கர் விவசாய நிலம்கூட இல்லாத ஒருவர் எப்படி தன்னை விவசாயி எனக் கூறுகிறார்? 10.5 விழுக்காடு வன்னியர் உள் இட ஒதுக்கீடு தந்த முதலமைச்சர் அதனை சரிவர அளிக்கவில்லை. அரசாணையில் பல குளறுபடிகள் உள்ளன. மாற்றம், முன்னேற்றம் என்று பேசிய அன்புமணி, தற்போது விவசாயி எடப்பாடி பழனிசாமி எனக் கூறுகிறார்.
இதற்கு முன் சரியான ஆளுமை கொண்ட அரசியல் தலைவர்கள் போட்டியிட்டனர். உதாரணமாக பெரியார், இராஜாஜி, அண்ணா, காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. ஆனால், இப்போது ஒரேயொரு ஆளுமை மிக்க தலைவர் தான் உள்ளார். அவர் மு.க ஸ்டாலின். அவருக்கு சரியான போட்டியாளர்கள் யாரும் இல்லை என்பதே எனக்கு வருத்தமளிக்கிறது” எனப் பேசினார்.
இதையும் படிங்க:தேர்தல் காரணமாக காவலர் உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு