தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2020, 2:17 PM IST

ETV Bharat / state

விழுப்புரத்தில் கரோனா சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவமனை!

விழுப்புரம்: கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விழுப்புரம் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்
அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனை தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், “கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் தயார்செய்யப்பட்டுள்ளன. இதில், தற்போது மூன்று பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தற்காலிக நடவடிக்கையாக, விழுப்புரம் நகரத்தில் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய காணொலி

கரோனா பரிசோதனை சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் வாங்க மாவட்ட நிர்வாகத்துக்கு இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை. தமிழ்நாடு அரசின் அறிவுரைகளைப் பின்பற்றினாலேபோதும். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 131 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: இறுதித் தேர்வை 34 ஆயிரம் பேர் எழுதவில்லை... இதுதான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details