விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்குச் சென்ற பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி (Special DGP Case) மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவர் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா குழு (Vishaka Committee) அமைக்கப்பட்டது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி இடைநீக்கம்செய்யப்பட்டார். இந்தக் குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.