விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் மனநலம் குன்றியோரை பராமரிக்கும் தனியார் காப்பகம் உள்ளது. இதை அன்பு ஜூபின் என்பவரும், அவரது மனைவி மரியாவும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சல்மான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கடந்த 2021ம் ஆண்டு எனது மாமா ஜாபருல்லாவை, குண்டலபுலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி காப்பகத்தில் சேர்த்தேன். அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு திரும்பிய பின், மாமாவை காண காப்பகத்துக்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. இதுகுறித்து காப்பக நிர்வாகத்திடம் கேட்டபோது உரிய விளக்கம் தரவில்லை. காணாமல் போன எனது மாமாவை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காணாமல் போன ஜாபருல்லாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீசார், வருவாய் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காப்பகம் சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்தது.