விழுப்புரம்:கடந்த 2021 பிப்ரவரி 21ஆம் தேதி, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய சட்டம் ஒழுங்கு காவல் துறை டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தார்.
இவ்வாறு புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்பி, பரனூர் சுங்கச்சாவடியை நெருங்கும்போது அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் கார் சாவியையும் பறித்து, பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியிடம் பேச வேண்டும் என பெண் எஸ்பியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெண் எஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் தொந்தரவு கொடுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் புகாா் அளிக்கச் சென்ற பெண் எஸ்பியைத் தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இவர்கள் இருவர் மீதும் கடந்த 2022 ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் இவ்வழக்கின் மீதான விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்பு நேற்று (பிப்.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்பியும் நேரில் ஆஜராகவில்லை. எனவே இதற்கான காரணத்தை அவா்களின் வழக்கறிஞா்கள் நீதிபதியிடம் தெரிவித்தனா்.
அப்போது அரசுத் தரப்பு சாட்சிகளான, உதவி விசாரணை அதிகாரியான சிபிசிஐடி சென்னை தலைமையிட முன்னாள் ஆய்வாளரும், தற்போதைய மாநிலக் குற்ற ஆவண காப்பக ஆய்வாளருமான கோமதி ஆஜராகி, நீதிபதியிடம் சாட்சியம் அளித்தாா். அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞா்கள் குறுக்கு விசாரணையும் நடத்தினா். இதனையடுத்து நீதிபதி புஷ்பராணி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
இதையும் படிங்க:பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - காவல் ஆய்வாளர் சாட்சியம்!