"குடியுரிமை காப்போம், குடியரசைக் காப்போம்" என்ற தலைப்பில் தமுமுக சார்பில் விழுப்புரத்தில் நேற்று (பிப். 20) கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுப் பணியை தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அதிமுக அரசு நிராகரித்துவிட்டு, பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்வதையே முக்கியப் பணியாக கருதுவதாக விமர்சித்தார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணியை நிறுத்தி வைப்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதாக அமையும் என்ற அவர், இந்தப் பணிகள் தொடர்ந்தால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.